சனி, 2 ஜூலை, 2011

கருவுறாத....



அம்மாவுக்கு மணமாகி

ஐந்தாண்டுகள் கருவுறவில்லை

அப்பனுக்கு பெண்பார்க்கிறார்கள்

அம்மாவுக்கு மறுமணம் செய்து

அப்போதாவது குழந்தை பிறக்குமாவென

யோசிக்காதது ஏன்?

கருவுறாத கருகேட்டது,

இ,வி,பி உலகம் (EVP world)




கடப்பாறைக் கொண்டு

கட்டடத்தை பெயர்த்து

கவிழ்த்து வைத்தேன்

நிறுவனத்தின் பெயர் மட்டும்

நேராய் நின்றது

புதன், 11 மே, 2011

விலைமகன்


ஒன்றுதான்
மாடும் மனிதனும் ஒன்றுதான்

உங்கள் குணங்களை
மாட்டுக்கும் ஏன் பழக்குகின்றீர்கள்

வரதட்சனை பெற்று
நீங்கள் இனவிருத்தி செய்தது போதும்

காசுக்காய்
இனவிருத்தி செய்துவிட்டு களைப்படையும் எருதிற்கும்
வரதட்சனைக்கே குடும்பம் நடத்திடும் மனிதனுக்கும்
வித்தியாசம் என்ன?

ஒன்றுதான்
விலைமகளும் மணமகனும்
இருவருமே காசுக்காய் படுக்கை விரிப்பர்

சனி, 7 மே, 2011

கையில் சுமப்பது பாரமா?

கால் கடுக்க
நடந்து வந்த கணவன் சொன்னான்
இந்த 'சனி'யனை நடக்கச் சொல்

இதைத்தானே
பத்து மாதம் வயிற்றில் சுமந்தேன்
கையில் சுமப்பது பாரமா?

வாழ்க அன்னையர்

அன்னையர் தினம்

சோறு இருந்த பானையைப்பார்த்தாள்....

அடியில் அகப்பட்டது அகப்பையில் பாதி...

எண்ணிப்பார்த்தாள் ஆளுக்கு ஐந்து கவளம்

பள்ளிக்கு சென்ற மகன் பசியில் வருவான்...

இரவு பசித்தாங்க மாட்டான்...

வளரும் பிள்ளை பசியுடன் இருக்கக்கூடாது...

பத்து கவளத்தையும் அவனுக்கே தந்தாள்

வயிற்றை நிரப்ப வழியில்லை

இருந்ததைத்தந்து ஈரத்துணியால்

தன்வயிற்றைத் தடவிக்கொண்டாள்

தன் பசி தெரியவில்லை

மகன் பசி போக்க

நாளை வேலைக்குப் போய்

கூலி வாங்கி...

ஒரு உருவாய் அரிசி வாங்கி...

வாழ்க அன்னையர் தினம்

வியாழன், 24 மார்ச், 2011

கச்சிதமாய் முடிப்போம்

இலவசங்கள் தருவதற்கு

வீதிதோறும் சாராயக்கடைகள்

எங்கள் வளர்ச்சிக்கு

ஸ்பெக்ட்ரம் போல சில வகை

கோடிகளுக்கு மேல்

சொல் உண்டென்றால்

அதிலும் செய்வோம் ஊழல்

போதைக்கு

அனைத்து போதைக்கும்..

அடிமையான உங்களுக்கு

சுய நினைவு வருவதற்குள்

எங்கள் வேலை கச்சிதமாய் முடிப்போம்

அருகதையுண்டா

லஞ்சம் வாங்கியே

பழக்கப்பட்டவர்கள்

தங்கள் நாற்காலிக்காய்

இலவசங்கள் அறிவிப்பு

இலவசங்கள் பெற்று அனுபவிக்கும்

உங்களுக்கு

இலஞ்சம்பற்றி பேச அருகதையுண்டா

என்றைக்கும்?

தேர்தல்

தமிழர்களே

உங்கள் உயிர் மதிப்பற்றது

இன்னும் இருபது நாட்களுக்கு மட்டும்

அவன் செயல்

எல்லாம் அவன் செயல்

ஊழலும் லஞ்சமும் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்

கற்பழிப்பும் கொலையும் அவன் செயல்

காலம்

அன்று...

வாழைப்பூ மடலெடுத்து

வகையாக காலில் கட்டி

மூடணி அணிந்ததாக

மிடுக்காய் நடந்தேன்

நுனா காயை பறித்துவந்து

நூதனமாய் தேர்வடித்து

பூவரசன் இலைஎடுத்து

பீபீயும் நான்செய்தேன்

கிட்டிப்புல் விளையாடி

கீற்று வீட்டின்கூறையிலே

தெனாவெட்டாய் மறைந்த புல்லை

கோலெடுத்து நான் எடுப்பேன்...

இன்று...

பத்துக்கு பத்துஅறைக்குக்குள்ளே

செயற்கையாய் குளிரூட்டி

கணினித்திரையில் விளையாட்டு

கிரிக்கெட்டும் ஸ்டார் வாரும்

உடலசையா விளையாட்டு

விரல் மட்டும் விளையாடும்.

வாக்களிப்பீர் எங்களுக்கே...

வண்ணத்தொலைக்காட்சி

வளி அடுப்பு

வந்தது உங்கள் வீட்டுக்கு எப்படி?

வீதிகள் தோறும் டாஸ்மாக் கடைகள்

கிரைண்டர் வேண்டுமா.. மிக்ஸிவேண்டுமா..

நிச்சயம் தருவோம்

சொன்னதைச் செய்வோம்

சொல்லாததையும் செய்வோம்...

கோயில் இல்லாத ஊரில்

குடியிருக்கவேண்டாம்

சொன்னார்கள் அன்று...

மதுக்கடை இல்லாத வீதியில்

குடியிருக்கவேண்டாம்

வரும் ஆட்சியில்...

சொல்லாமல் செய்வோம்

வாக்களிப்பீர் எங்களுக்கே...

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

சாதியின் வகைக்காண...

குருதியில் சில வகை
சாதியில் பலவகை
குருதியின் வகைக்காண
ஆய்வுகள் பல உண்டு
சாதியின் வகைக்காண...

சனி, 8 ஜனவரி, 2011

ஊர் நாறும்

தன் மலத்தை கழுவியதற்கே
வழலை தேடி அழைகின்ற மனிதா...

உன் மலத்தை...
ஊர் மலத்தை...
முழுகி முத்தெடுக்கும் கடல் தொழிலாளிபோல்
மனமொப்பி செய்கின்றவனை...

ஊர்கோடியில்...
ஒதுக்குபுறமாய்...
தேனீர்கடையில் தனிக்குவளை தந்து...

யோசித்துப்பார்...
அவனைபுறந்தள்ளினால்....

அவன் உன்னை புறந்தள்ளினால்...

ஊர் நாறும்
உன் வீடும் நாறும்.

புதன், 5 ஜனவரி, 2011

சேவல் கத்தின..

அன்று

காலை வேலையில்

சேவல் கூவின...

இன்று

உணவுத்தேவைக்காய்

கறிக்கோழி வளர்ப்பு

கூவாது... மேயாது....

நின்ற இடத்தில்

கிடைத்ததை முழுங்கி

நிறைந்து(நிறைத்து) வளர்ந்தன

கொழுத்து வளர்ந்தன

காலையில் எழுவதற்கு

செல்பேசியில்...

செயற்கைக் கோழி

சேவலாய் கத்தின.