பெரியார் திராவிடர் கழகம் இன்றைய தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத
சக்தியாக,
தமிழக சிக்கல்களையும் ஈழத்தமிழர்களின் சிக்கல்களையும் கையாளுவதில் உலகத்தமிழர்களின்
நம்பிக்கைக்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்கமாக உருவெடுத்து வந்தது. எந்த சுயநலமும் இல்லாத
தலைவர்களைக் கொண்டதாக உருவாகி வந்தது.
பெரியார் விட்டுச்சென்ற பணியை முடிப்போம்
என சொன்ன இயக்கம் பெரியார் விட்டுச்சென்ற கருத்துக்கருவூலமான குடியரசு இதழ்களை வெளியிட
தடை
வாங்கியிருந்த நிலையில் அதை முறியடித்து வெற்றிகரமாக பெரியாரின் எழுத்துக்கள் மக்களுக்கானது
அதை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என சட்ட வழி அங்கீகாரத்தை வாங்கித்தந்தது
மட்டும் இல்லாமல் குடியரசு இதழ்களின் எழுத்தும் பேச்சும் என தொகுத்து பெரியாரின் கொள்கை வாரிசுகளாக
பரிணமித்து வந்தது
பெரியார் திராவிடர் கழகம்.
பெரியார் காலத்தில் நடந்த பல போராட்டங்களையும்
அதில் போராடியவர்களையும் பெருமைபட வெளிக்காட்டி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க
வேண்டிய பெரியாரின்
வாரிசுகள் சரியாக அவர்களை அங்கீகரிக்கவோ அதை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அவர்களை
காட்டி இத்தகையவர்கள் இந்த இயக்கதிற்காக பாடுபட்டார்கள் என காட்டாத நிலையில் அதை சரியாகவும் சட்ட எரிப்புப்போராட்டத்தில்
போராடி சிறை சென்ற பலர் இன்றும் உயிருடன் இருப்பதை அறிந்து அவர்களைப்பற்றிய செய்திகளை தொகுத்து
அவர்களை சட்ட எரிப்பு
போராட்ட வீரர்கள் என வகைப்படுத்தி தஞ்சையில் மாநாடு நடத்தி பெருமைபடுத்தியது பெரியார்
திராவிடர் கழகம்.
இன்றைய நவீன உலகத்தில் சாதியை யார்
பார்க்கின்றார்கள் என பலர் சொல்லிக்கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சாதிய ஒடுக்குமுறையாக இரட்டைக்குவளை
முறை இருப்பதை தமிழகமெங்கும் சிறிய ஊர்களிலும் சென்று பட்டியல் எடுத்து அதை அப்புறப்படுத்த
அரசிடம் கோரிக்கை வைத்தும்
அதன்மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் இரட்டைக்குவளை உடைப்பு போராட்டம் செய்தது பெரியார்
திராவிடர்கழகம்.
அதைத்தொடர்ந்து இரட்டை சுடுகாடு
இருக்கின்ற இடத்தை குறிப்பிட்டு அதற்காக தமிழக அரசின் "தீண்டாமை ஒழிப்புப்பிரிவு'' காவல் நிலையத்தை இழுத்து
மூடும் போராட்டத்தை
செய்தது பெரியார் திராவிடர் கழகம்.
ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பை கண்டித்து
தமிழகத்தில் பல இயக்கங்களும் பல வாக்கு அரசியல் கட்சிகளும் போராடிக்கொண்டிருந்த வேலையில்
கோவையில் இலங்கை அரசுக்கு
கொடுப்பதற்காக ஆயுதங்கள் செல்வதை கண்டு அதை எதிர்த்து நேர்மையாகவும் துணிவுடனும்
மறியல் செய்து,
இராணுவ வாகனம் என்பதையும் அறிந்து எந்த வித அச்சமும்
கொள்ளாமல் மக்கள் மத்தியிலும் உலகத்தினர் முன்பும் அம்பலப்படுத்தியது பெரியார் திராவிடர் கழகம்.
இப்படி பெரியார் திராவிடர் கழகமாக
இணைந்து செயல்பட்ட பிறகு வேகமாகவும் நேர்மையாகவும் போராடியதன் விளைவு பெரியார் திராவிடர்
கழகம் வளர்ந்தது. பெரியார்
திராவிடர்கழகத்தின உறுப்பினர்கள் எத்தனைபேர் என்பதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களை லட்சக்கணக்கில் பெற்றது இந்த இயக்கம். ஏன் இன்னும் சொல்லப்போனால்
திராவிடர்கழகத்தில் இன்னும் இருந்துகொண்டு அதன் செயல்பாடுகளில் முழு ஈடுபாடு கொள்ளாமல் பெரியார்
திராவிடர்கழகத்தின் செயல்பாடுகளை நம்பிக்கையுடன் பார்த்த பலரை காணலாம். பல
இடங்களில் எங்களால்
செய்ய இயலாததை உங்கள் இயக்கம் செய்துகொண்டிருக்கின்றது என வெளிப்படையாக சொல்லும் பலர்
இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பெரியாரை விமரிசனம் செய்கின்றேன்
என்கின்ற பெயரில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பதாக சொல்கின்ற பல தமிழ்த்தேசிய இயக்கங்கள்
பெரியாரை கொச்சைப்படுத்த முயலுகின்றன. பெரியார்
தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை என சொல்லித்திரிகின்றனர். பெரியார் காலத்தில் இருந்த தமிழ்நாடு பற்றி அறியாமல்
அதை இன்று இந்த நிலைக்கு மாற்றியது எது என புரிந்துகொள்ளாமல் இப்படி பெரியாரை கொச்சைப்படுத்தி
வருகின்றனர்
இந்த சூழலில் பெரியார் திராவிடர்
கழகத்தில் பிளவு தோழர் கோவை இராமகிருட்டிணன் வெளியேற்றம் என செய்தி வருவதைப்பார்த்த
சிலர் இந்த பிளவு பெரியார்
திராவிடர் கழகத்திற்கு தற்கொலை முயற்சி எனவும், இதைப்பார்த்தால் தோழர் வீரமணியே பரவாயில்லை என்றும் வெளிப்படையாகச் சொல்லும்
நிலை வந்துள்ளது.
சரி அப்படி என்ன பிரச்சினை இந்த
பிளவு வருவதற்கு
தோழர் கோவை இராமகிருட்டிணன் மீது
சில குற்றச்சாட்டுகள்
குற்றச்சாட்டுக்கு சில விளக்கங்களை
அவர் சொல்லியிருக்கின்றார்.
கோவையில் நடந்த செயற்குழுவில் தோழர்
தாமரைக்கண்ணன் மீது சில குற்றச்சாட்டுகள்
அதற்கு இதுவரை சரியாக விளக்கம்
தரவும் இல்லை. அப்படி சொல்கின்ற குற்றச்சாட்டுகள் தன்மீது சொல்கின்ற குற்றச்சாட்டு போல
என தலைவர் தோழர் கொளத்தூர்
மணி அதற்கு பதில் சொன்னது எந்த வகையில் நியாயம். தோழர் தாமரைக்கண்ணன் மீது வைத்த
குற்றச்சாட்டிற்கு தோழர் தாமரைக்கண்ணன் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
தோழர் சிற்பி இராசன்,
தோழர் தாமரைக்கண்ணன் மீது வைக்கின்ற பொருளாதாரக் குற்றச்சாட்டிற்கு
இதுவரை விளக்கம் சொல்லவில்லை.
சென்னையில் நடந்த செயற்குழுவில்
தோழர் கோவை இராமகிருட்டிணன் மீது வைத்த குற்றச்சாட்டுகளை அச்சிட்டு செயற்குழு உறுப்பினர்களுக்கு கொடுத்ததென்பதும் அதை மறுத்து
பதில் சொல்லும்போது இப்படி உள்ள குற்றச்சாட்டுகளை எனக்கு முன்பே கொடுத்திருந்தால் சரியான
விளக்கத்தை நானும்
கொண்டுவந்திருப்பேன் என அவர் சொன்னதும் செயற்குழு உறுப்பினர் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இன்னும் 2 ஆண்டுகள்
இப்படியே செயல்படுவது எனவும் கட்சிக்கான கொள்கை அறிக்கை சட்டதிட்டங்கள் குழு அமைத்து
முறைப்படுத்துவது எனவும்
சென்னையில் நடந்த செயற்குழுவில் முடிவெடுத்த பின் தறபோது செயற்குழுவைக்கூட்டாமலும்
தன்னிச்சையாக வருகின்ற ஆகஸ்ட் 12 அன்று ஈரோடு வாருங்கள் புதிய இயக்கம்
தொடங்கலாம் என தோழர் கொளத்தூர் மணி அறிக்கையும் ஆகஸ்ட் 18 கோவை வாருங்கள்
என தோழர் கோவை இராமகிருட்டிணன் அறிக்கையும் வந்துள்ளது. பெரியார் கொள்கையில் நம்பிக்கையும் இவர்கள்
இணைந்து செயல்பட்டால்
இன்னும் வேகமாக செயல்படலாம் என எண்ணிக்கொண்டிருக்கின்ற பெரியார் திராவிடர்கழக உறுப்பினர்களும்
கண்ணுக்குத் தெரியாத, பெரியார் கொள்கை வெற்றி பெற வேண்டுமானால் இதற்கு இவர்கள் இணைந்து
செயல்பட்டால் வெற்றி
கிடைக்கும் என நம்பும் பலருக்கும் ஏமாற்றம் அளிக்கின்றது.
தோழர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் உடன் இருக்கின்ற
தோழர்கள் மத்தியில் தோழர் பொள்ளாச்சி மனோகரன் மீது குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர், அப்படி வைத்தக்குற்றச்சாட்டுகளை இனி வராமல் தவிர்க்க
ஆவண செய்வதாக தோழர் கோவை இராமகிருட்டிணன் உறுதிமொழி கொடுத்து அதன் அடிப்படையில் அவர்கள்
ஒற்றுமையாக செயல்படுவது என முடிவெடுத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சிப்போக்கு இரண்டு அணியிலும்
முன்னமேயே நடந்திருந்தால் இந்த பிளவுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதை இரு அணியினரும் சிந்திக்க வேண்டும்.
இந்த பிளவில் யாருக்கு மகிழ்ச்சி
இருக்கின்றதோ இல்லையோ இந்திய ஆளும் வர்க்கத்திற்கும், தமிழகத்தை ஆளவேண்டும் ஆனால் தமிழர்
நலனில் அக்கறை காட்ட வேண்டாம் என எண்ணி அதன் அடிப்படையில் ஆட்சி செய்யும் அரசியல் வாதிகளுக்கும்
மிக மகிழ்ச்சி தான். அதேபோல இந்த பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாட்டில் மிக அதிகம்
சிரமப்பட்டது உளவுத்துறை தான், காரணம் இவர்கள் என்ன போராட்டத்தை எந்த செயல்பாட்டை எப்போது
எடுப்பார்கள் என அவர்கள் தகவல் திரட்ட போராட வேண்டியிருக்கின்றது, ஆகவே, இந்த பிளவு
உளவுப்பிரிவினருக்கு மிக மகிழ்ச்சியை தருகிறது.
இனி பெரியார் திராவிடர் கழகத்தில்
இருந்துகொண்டே இருவரும் இணைந்து செயல்படுவது தான் சரி என நினைக்கும் பல பெரியார் தொண்டர்களுக்கு
இவர் பக்கம்
போவதா அவர் பக்கம் போவதா என்பதை விட இருவரின் பக்கமும் போக வேண்டாம் என எண்ணி ஒதுங்கி
விட வாய்ப்பு உள்ளது. அப்படி ஒதுங்குவது என்பது பெரியார் கொள்கைக்கு எதிரானவர்களுக்கு
வேண்டுமானால் மகிழ்வாக இருக்கலாம் உண்மையான பெரியார் கொள்கையில் ஈடுபாடு உடையவர்களுக்கு
உடன்பாடு இல்லை.
ஆகவே, அவர்களை
ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அப்படி ஒருங்கிணைந்தால் நல்லது
என பலர் நினைக்கின்றார்கள். அப்படி வருவதுதான் இந்த நேரத்தில் நல்லதும்
கூட. சிந்திப்பீர்.