சனி, 19 ஜூன், 2010

தமிழினம் காப்பார்...

மன்மோகன் அலுவலகத்தில்
அடுக்க முடியாத கடிதங்கள்...
காலையில் ஒன்றும் கடும்பகல் ஒன்றும்
மாலையில் ஒன்றும் மயக்கும் இரவினில் ஒன்றும்...
விடிய விடிய ஒன்றுமாய்...

தமிழர்களின் அவலங்களை அம்பலப்படுத்தியக் கடிதங்கள்
மன்மோகன் அதை
படித்துப்படித்தே இந்தியாவையே ஆளுகின்றார்,

எழுதிய கைக்கு எத்தனை கணையாழிப் போட்டாலும் தகும்.

கடிதத்தின் வரலாறு தெரியாதவர்கள்
புலம்பித்தீர்க்கின்றனர்

இந்தியாவின் வரலாற்றை
கடிதம் மூலமே மகளுக்குச் சொன்ன வரலாறு உண்டு
தம்பிக்கு கடிதம் எழுதிய அண்ணாவை
தமிழினமே திரும்பிப்பாத்தது.

அண்ணா இன்று உயிரோடிருந்தால்...
கடிதம் எழுதுவதையே நிறுத்தியிருப்பார்...

எஸ் எம் எஸ் ம் இமெயிலும்
தொலைபேசியும் கைப்பேசியும்
பேக்சும் இருக்கையில்...
கடிதத்தின் மூலமே
சாதனை படைத்திடும் மக்களின் ''தலைவன்''

மகனுக்கோ மகளுக்கோ பதவியென்றால்...
கடிதம் எழுதி சங்கடப்படுத்தாமல்
கடுகி விரைந்து நேரில் சென்று
''மெதுவாகப்பேசி'' வாங்கிவருவார்.

சுற்றுச்சூழல் ஆர்வளர்களே...
நீங்கள் தயவுசெய்து போராடாதீர்கள்...
மரங்கள் அழிகின்றன என்று
எம்மினத்தின் அவலங்களை
இந்தியாவிற்கு தெரியப்படுத்த
இன்னும் காகிதங்கள் தேவைப்படும்.

தமிழகத்தின் கடைசி மரத்திலிருந்து
மரக்கூழ் தயாரானப்பின்பும்
கடிதம் எழுதக்காகிதம் தேவைப்படும்
அயல்நாட்டிலிருந்தும்
மரங்கள் வாங்கி காகிதம் தயாரித்து...
கடிதம் எழுதுவார்...
கண்டிப்பாய் வெல்வார்...
கண்டிப்பாய் தமிழினம் காப்பார்...

(எனது நண்பரும் கலைஞரின் பற்றாளருமான ஒருவரின் சில திருத்தங்களுடன் இந்த வரிகள் - நன்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக